Sunday, April 26, 2009

திருநெல்வேலி அல்வாவும் பல்பு வாங்கிய கதையும்!!! - பாகம் இரண்டு

....... அந்த கேள்வியை கேட்டவுடன் அப்படியே ஒன்றும் புரியாதவன் போல் எங்கள் மூவரையும் பார்த்தான். கூச்சமே படாமல் முகத்தை பரிதாமமாக வைத்துக்கொண்டு "சாரி! அல்வா தொலைந்துவிட்டது" என்றான். அப்படியே என் இதயத்துக்குள்ளே ஒரு இடி இடிக்கும் சத்தம். இருந்தாலும் மனதை தளரவிடாமல் மறுபடியும் கேட்டேன் - கேட்டோம். "டேய்! என்னடா சொல்ற? ரெண்டே கால் கிலோ எப்படியடா காணமல் போகும்? எங்கே வைத்தாய்?" என்றும் கேட்டோம்.

இங்கிருந்து ஒரு செம பிட் ஆரம்பித்தது நம்ம பையனிடமிருந்து. "பேக்கில் சைடு பவுச்சில் வைத்திருந்தேன். ஹைதராபாத் ஏர்போர்ட்ல் இறங்கியவுடன் செக் பண்ணினேன், அல்வாவை காணவில்லை. கிங் பிஷ்செர் ஏர்லைன்ஸ் பணியாள் எவனோ ஒருத்தன் தான் அல்வாவை அபேஸ் பண்ணிவிட்டான்' என்றான். 'டேய், அது எப்படி சாத்தியம் ?" என்றதற்கு, "சென்னைல ஹைதராபாத் பிளைட் ஏறும்போது பேக் பாக்க முடியல. அங்க தான் எவனாவது" என்று இழுத்தான். "சரி நீ கிங் பிஷ்செர் ஆபீஸில் கேட்கவில்லையா?" என்றும் கேட்டேன் . " ஹைதராபாத் வந்தவுடன் தான் எனக்கு அல்வா தொலைந்தது தெரியும். செம கோபம் எனக்கு. ப்ளைட் அலுவலகத்தில் செம சண்டை போட்டேன். ஆனாலும் புண்ணியம் ஒண்ணுமில்ல. சண்டையினால்தான் லேட் ஆகிவிட்டது வந்து சேருவதற்கு"என்று அதி விவேக சூப்பர் பிட் ஒன்று போட்டான். நாங்கள் விடுவதாக இல்லை. நான்கு நாட்களாக சப்பு கொட்டி காத்திருந்தோம் அல்லவா ? சரி விடக்கூடாது, பையன் பீலா விடறான் இல்லாவிட்டால் விளையாடுகிறான், திருப்பியும் நோண்டுவோம் அப்டீனுட்டு மறுபடியும் வெட்கமே இல்லாமல் கேட்டோம் - "மச்சி! அல்வா எங்க?"

மறுபடியும் கூச்சமே படாமல் சொன்னான் "தொலைந்துபோய்விட்டது என்று தான் கிங் பிஷ்செர் காரன் சொல்றான்" என்றான். தூக்கி வாரி போட்டது. "டேய்! நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? இல்லாவிட்டால் விளையாடுகிறாயா?" என்று கேட்டதுதான் தாமதம். "நான் சாப்பாடு விஷயத்தில் பொய் சொல்லமாட்டேன்" அப்டீனு இன்னொரு பிட் வேற!!!!

சரி அப்போ நிஜமாகவே தான் அல்வா தொலைந்துபோய் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, 'என்னடா இது! இப்படி ஆகிவிட்டதே' என்று வருத்தப்பட்டு, கொஞ்ச நேரம் அல்வாவை பற்றி யோசித்துக்கொண்டிருந்தோம். சரி போனால் போகட்டும் விட்டு தள்ளு என்று சொல்லிவிட்டு நம்ம பையனை சாப்பிட சொன்னோம். ஆனாலும், 'அல்வாவை வாங்கிவிட்டு அதை சைடு பவுச்சில் எவனாவது வைப்பானா ?' என்று மனதிற்குள் நம்ம பையனை திட்டிக்கொண்டு, சாப்பாடு போட்டோம்.

அன்று இரவு மிகுந்த வருத்தத்துடன் தூங்கசென்றோம். சிறிது நாட்கள் கழித்து, அந்த நண்பி என்னிடமும், குஷி பார்ட்டி நண்பனிடமும் ஒரு விஷயம் சொன்னாள். 'அல்வா ரகசியம் எனக்கு தெரியும்! அல்வா தொலைந்துபோகவில்லை' என்று சொன்னாள்!. சரி, அப்படியென்றால் என்ன நடந்திருக்கும்? என்று கேட்டோம். "நம்ம பையன் இருட்டு கடை பக்கம் தலை வைக்கவே இல்லை" இது தான் நடந்தது என்று பெரிய குண்டை போடவே, ஆத்திரமும் ஆச்சரியமும் பட்டு, வைகைப்புயல் பார்த்திபனிடம் 'எப்டி,எப்டி, எப்டி' என்று கேட்ட மாதிரி நானும் என் நண்பனும் கேட்டோம்.

'நம்ம பையனை பற்றி எனக்கு நன்றாகத்தெரியும். அவன் நிறைய நேரங்களில் இதை மாதிரி எனக்கு பல்பு கொடுத்திருக்கிறான். நாம் ஒரு பொருள் அவனை வாங்கிக்கொண்டு வரசொல்லுவோம். அவனும் வாங்க ட்ரை பண்ணுவான். முடியாமல் போனால் இந்த மாதிரி எதாவது பிட் போடுவான்' என்றும் சொன்னாள். 'சரி, இவனால் இருட்டு கடைக்கு போக முடியவில்லைன்னு வச்சிக்குவோம். அப்புறம் எதுக்கு 'நான் போனேன், ரெண்டே கால் கிலோ வாங்கினேன்னு" என்னத்துக்கு சொல்லணும்? அப்டீனேன்.

அப்போ ஒரு உண்மையை சொன்னாள். "அதெல்லாம் கரெக்ட் தான். ஆனாலும், நம்ம அவன வாங்கிட்டு வாடான்னு சொல்லி அனுப்பும்போது, திரும்பி வந்ததுக்கப்ரம் " என்னால அந்த கடைக்கு போகமுடியல, அதுனால தான் வாங்கல" அப்டீனு சொன்னா நம்ம வருத்தப்படுவோம் இல்லையா? அதுனால தான் இந்த பிட் எல்லாம்" என்றும் விளக்கம் சொன்னாள்.

சரி அப்போ நம்ம பையன் இருட்டு கடைக்கு போகவில்லை என்று ஊர்ஜிதம் செய்யவேண்டும். எப்படி செய்யலாம் என்று ஐடியா பண்ணினோம். அந்த நண்பரும் நண்பியும் சொன்னார்கள் "நம்ம பையன் கூட திருநெல்வேலி சென்றவரை எங்களுக்கு தெரியும். அவரிடம் கேட்போம்" என்று. மூன்று நாட்கள் கழித்து பதில் வந்தது.

நண்பியும், நண்பனும்(குஷி) நம்ம பையனுடன் நெல்லை சென்றவரை
சந்தித்திருக்கிறார்கள்." 'நம்ம பையன்' உங்களுடன் தானே வந்தான்? இருட்டு கடை அல்வா வாங்கினானா ?" என்று கேட்டார்களாம். அந்த நபர் இந்த கேள்வியை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு சொன்னாரம் "நம்ம பையனாவது இருட்டு கடையாவது" என்று. மேற்க்கொண்டு சொன்னாராம் "நான் இருட்டு கடைக்கு சென்றேன். அவனும் என்னுடன் வந்தான். நாங்கள் ஆளுக்கு கால் கிலோ வீதம் அல்வா வாங்கி சாப்பிட்டோம். நான் கூட கேட்டேன் 'என்னடா ஊர்ல நண்பர்களுக்கு அல்வா கொஞ்சம் வாங்கிட்டு போகலையான்னு? ' அதுக்கு நம்ம அன்பு பையன் "இல்லீங்கோ ! அவாள்லாம் அல்வா சாப்பிட மாட்டளுங்கோ" அப்டீனு பிட் மேல பிட் அள்ளி விட்டுருக்கான். 'சபா!!!' அப்டீனு அவரும் அதுக்கப்பறம் ஒன்னும் கேட்கலையாம்.

இந்த மேட்டர் நம்ம காதுக்கும் வந்து சேர்ந்தது. சரி நம்ம பையன் கிட்ட கேப்போமா வேணாமா அப்டீனு ஒரு குழப்பம் வேற. சரி கேட்டு தான் பார்ப்போமே. குரூப் ஆக பல்பு வாங்கிருக்கோம். கேட்டுவிடுவோம் அப்டீனு முடிவு பண்ணி கேட்டும் தொலைச்சோம்.

"தம்பி! நீ பீலா விட்ட. உன் கூட வந்த அந்த நல்ல மனுஷன் எல்லாத்தையும் உளறிவிட்டார். இப்பயாச்சும் சொல்லு.... அல்வாவே வாங்காம எதுக்கு இவ்ளோ கத விட்ட? அட, 'கடைக்கு போக முடியல, கொஞ்சம் பிஸி.. அடுத்த தடவை ட்ரை பண்ணலாம்" அப்டீனு சொல்லிருக்கலாமே அப்டீனு கேட்டோம். 'நம்ம பையன்' ஒரு வித்தியாச பார்வை ஒன்னு பார்த்தான். இந்த பூனையும் பால் குடிக்கும்மா? அப்டீன்ற லுக்கு. நம்மளுக்கு தான் இந்த பார்வை எல்லாம் பழக்கமானது தான. அதுனால கண்டுகிடாம, 'தம்பி என்ன லுக்கு! சொல்லுப்பா' அப்டீனோம்.

நம்ம பையன் சொன்னான் "டேய்! நான் இருட்டுக்கு கடைக்கு போனேன். முன்னாடி சொன்ன மாதிரி ரெண்டே கால் கிலோ அல்வா வாங்கினேன். வர வழில தான் பிளைட்ல தொலஞ்சிபோசி அப்டீனான்". "ஐயோ! அம்மா! முடியலையே" அப்டீனு கதறும் நிலைமைக்கு வந்துவிட்டோம் இந்த பதிலை கேட்ட பிறகு. கடைசி ட்ரை அப்டீன்னு ஒரே ஒரு கேள்வி கேட்டோம். "சரி, அப்டி நீ போனதாகவே வச்சிக்குவோம். ஏன் உன் கூட வந்த அந்த நல்ல மனுஷன் அப்டி சொல்லணும்"? ன்னு.

ஒரே ஒரு பதில் தான் சொன்னான் "அவருக்கு நான் அல்வா வாங்கினது தெரியாது" !!!

நம்ம பையனை நாங்கள் மூவரும் எங்கள் கடைசி மூச்சிருக்கும்வரை மறக்க இயலாது!!!!!

1 comment:

  1. வாய் இல்லா பூச்சியை இப்படி கொடுமை படுத்த கூடாது.

    ஐய்யோ பாவம் - நீதான்.
    Next time when you cook chicken don't forget me. I'll help you in eating! :-D

    ReplyDelete